ரயில் பெட்டியைக் காணவில்லை : டி.டி.ஆர் அதிர்ச்சி, பயணிகள் தவிப்பு
சென்னை சென்ட்ரலில், புறப்படத் தயாராக இருந்த, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெட்டியை காணாததால் டி.டி.ஆர் அதிர்ச்சியடைந்தார், அந்தப் பெட்டிக்கு முன்பதிவு செய்திருந்த பயணிகள் தவித்தனர்.
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இரவு 10: 40 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். இந்த ரயில் மறுநாள் காலை 5.50 மணிக்கு ஈரோட்டை சென்றடையும்.
இந்நிலையில், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வழக்கமாக 11 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். கூட்ட நெரிசலை பொறுத்து கூடுதலாக 2 பெட்டிகள் வரை இணைக்கப்படுவது வழக்கம். இதில் ஒரு பெட்டி பெண்களுக்கும், ஒரு பெட்டி மாற்று திறனாளிகளுக்கும், 3 பெட்டிகள் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயிலில் பெரும்பாலும் அதிகமான பயணிகள் பயணம் செய்வது வழக்கம். இந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வழக்கம் போல் சென்னையில் இருந்து 10: 40 மணிக்கு ஈரோட்டுக்குப் புறப்பட தயாராக இருந்தது.
முன்பதிவு செய்த பயணிகள் தாங்கள் பதிவு செய்துள்ள பெட்டிகளில் ஏறி அமர்ந்தனர். ஆனால் 'எஸ் 3' என்ற பெட்டியில் முன்பதிவு செய்த பயணிகள் அந்த பெட்டியை தேடி அலைந்தனர். அனைத்து பெட்டிகளிலும் தேடியும் 'எஸ் 3' பெட்டியைக் காணவில்லை.
இதனால் அந்த பெட்டியில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள், மிகுந்த பதற்றத்துடன். தொடந்து பிற பயணிகளை விசாரித்தனர். அந்த ரயில் முழுவதும் தேடியும் அந்த ஒரு பெட்டியைக் காணவில்லை.
இதைத் தொடர்ந்து, இது குறித்து டி.டி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து பார்த்த போது, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் 'எஸ் 3' பெட்டி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து, அவர் சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளிடம் ரயில் பெட்டியைக் காணவில்லை என்று தகவல் கொடுத்தார். இது குறித்து விசாரித்தபோது 'எஸ் 3' பெட்டியை ஊழியர்கள் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்க மறந்தது தெரியவந்தது.
இதன் பிறகு 'எஸ் 3' பெட்டி அவசர அவசரமாக மாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து நிம்மதியடைந்த பயணிகள் அந்ப் பெட்டியில் ஏறி தங்ள் முன்பதிவு இருக்கையில் அமர்ந்து நிம்மதியடைந்தனர்.
இதனால் 10: 40 மணிக்குப் புறப்படவேண்டிய அந்த ரயில் 1 மணி 10 நிமிட நேரம் தாமதமாக 11.50 மணிக்கு புறப்பட்டுச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.