10 ஆயிரம் தமிழக போலீசாரிடம் லைசன்ஸ் கிடையாது? - அதிர்ச்சி செய்தி
தமிழகத்தில் பணி புரிந்து வரும் பல ஆயிரம் காவல்துறை அதிகாரிகளிடம் ஓட்டுனர் உரிமம் கிடையாது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக காவல்துறைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 13 ஆயிரம் பேருக்கு வருகிற அக்டோபர் மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி துவங்கிய நாளில் இருந்து 6 மாதத்திற்குள் அவர்களுக்கு இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் பயிற்சி அளிக்க வேண்டும் என்பது விதிமுறைகளில் ஒன்றாகும்.
அதைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அவர்களில் 2810 பேர் இன்னும் எல்.எல்.ஆர் எனப்படும் பழகுனர் உரிமத்தையே எடுக்கவில்லை என்பது தெரியவந்தது. அதேபோல், ஏற்கனவே பணியில் உள்ள 7200 காவல்துறை அதிகாரிகளிடம் ஓட்டுனர் உரிமமே இல்லை என்பதும், அதற்காக அவர்கள் இதுவரை விண்ணப்பிக்கக் கூட இல்லை என்பதும் தெரியவந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால், அவர்கள் அனைவரும் ஓட்டுனர் உரிமத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பொதுமக்கள் வாகனம் ஒட்டினால், அபராதம் விதித்தும், நீதிமன்றத்தில் நிற்க வைத்தும் நடவடிக்கை எடுக்கும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் உட்பட காவல் துறையின் பல பிரிவுகளில் பணிபுரியும் பலரிடம் ஓட்டுனர் உரிமமே இல்லை எனத் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.