1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 28 ஜூன் 2018 (12:32 IST)

மிரட்டும் எடப்பாடி அரசு : ஊடகங்கள் பணியுமா? பாயுமா?

தினகரன் தொடர்பான செய்திகள் மற்றும் அரசுக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்பக்கூடாது என ஆளும் தரப்பு ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களை மிரட்டி பணிய வைப்பதாக புகார் எழுந்துள்ளது.

 
சசிகலா தயவால் முதல்வர் ஆன எடப்பாடி பழனிச்சாமி தொடக்கத்தில் பவ்யம் காட்டினாலும், பிரதமர் மோடி தரப்பு கொடுத்த ஆதரவு மற்றும் ஊக்கத்தினால் தற்போது எதற்கும் அஞ்சாதவராக மாறி வருகிறார். தூத்துக்குடி விவகாரமும், 8 வழிச்சாலையும் அதற்கு மாபெரும் சாட்சி. அதோடு, சட்டசபையில் திமுக தரப்பு தொடுக்கும் புகார்களுக்கு அசால்ட்டாக பதிலளித்தும் வருகிறார். 
 
எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பிற்கு எதிராக களம் இறங்கிய டிடிவி தினகரன் பேட்டிகளில் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். இன்னும் சில மாதங்களில் ஆட்சி முடிவிற்கு வந்து விடும் எனக்கூறினார். அதோடு, ஆர்.கே.நகர் தேர்தலிலில் அவர் மகத்தான வெற்றியும் பெற்றார். எனவே, இதையெல்லாம் எடப்பாடி-ஓபிஎஸ் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனக்கூறப்படுகிறது.
 
ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற வரை தினமும் டிடிவி தினகரன் தொடர்பான செய்திகளையும், அவரின் பேட்டிகளையும் ஒளிபரப்பி வந்த தமிழகத்தின் முக்கிய சேனல்கள் கடந்த சில மாதங்களாக அதை நிறுத்திவிட்டன. தொலைக்காட்சிகளில் தினகரனின் பேட்டியை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. 

 
சமீபத்தில் திருப்பூர் உட்பட பல ஊர்களுக்கும் தினகரன் அரசியல் சுற்றுப்பயணம் செய்தார். ஆனால் அது தொடர்பான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. இதற்கு பின்னனியில் ஆளும் தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
தினகரன் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பக்கூடாது என செய்தி சேனல்களுக்கு தமிழக அரசிடமிருந்து உத்தரவு போயிருக்கிறதாம். அதையும் மீறி ஒளிபரப்பினால் அரசு கேபிளில் இருந்து விலக்கப்படும். சேனலின் புள்ளிகள் பல இடங்களுக்கு பின்னால் தள்ளப்படும் என மிரட்டப்பட்டதாம். அதன் விளைவாகவே தினகரன் தொடர்பான செய்திகளை ஒளிபரப்புவதை செய்தி சேனல்கள் நிறுத்திவிட்டன அல்லது அடக்கி வாசிக்கின்றன. அதேபோல், விவாத நிகழ்ச்சிகளில் தினகரன் தரப்பு ஆட்களை அழைக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.  
 
தற்போது சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு, சேலம், தர்மபுரி, திருவண்னாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வசிக்கும் விவசாயிகளின் எதிர்ப்பு குறித்து கூட செய்திகள் எதுவும் தொலைக்காட்சிகளில் நாம் பார்ப்பதில்லை. அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம் செய்யும், கண்ணீர் விடும், கதறி அழும் வீடியோக்கள் கூட வாட்ஸ்-அப்பில் மட்டுமே பகிரப்பட்டு வருகிறது.

 
அதேபோல், தினகரன் தொடர்பான செய்திகள் மற்றும் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான செய்திகளை வெளியிடும் செய்திகளை வேலையிலிருந்து நீக்குங்கள் எனவும் நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக தெரிகிறது.
 
இப்படி அதிகப்படியான நெருக்கடிகளை ஆளும் தரப்பு கொடுப்பதால் செய்தி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் நிர்வாகத்தினர் டென்ஷன் ஆகியுள்ளனர் எனவும் இதை எப்படி சமாளிப்பது என அவர்கள் ஆலோசித்து வருகின்றனர் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஆனால், ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு  சன் தொலைக்காட்சியும், ஜெயா தொலைக்காட்சியும் செவி சாய்க்கவில்லை எனக்கூறப்படுகிறது. எனவே, அந்த இரண்டு சேனல்களில் மட்டும் தினகரன் மற்றும் 8 வழிச்சாலைக்கு விவசாயிகளின் எதிர்ப்பு குறித்த செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.