கவர்னருடன் சமாதானம் மாநில அரசு திடீர் முடிவு?
கவர்னருடன் சமாதானம் மாநில அரசு திடீர் முடிவு?
குடியரசு தினத்திற்குள், கவர்னருடன் இணக்கத்தை ஏற்படுத்த, தமிழக அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகிஉள்ளது.கடந்த 2021 செப்டம்பர் 18-ம் தேதி, தமிழக கவர்னராக ரவி பொறுப்பேற்றதில் இருந்து, தி.மு.க., அரசுடன் இணக்கமற்ற போக்கே நீடித்து வருகிறது.
உளவுத் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய ரவி, பணி ஓய்வுக்கு பின், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர், நாகலாந்து கவர்னர் போன்ற முக்கிய பதவிகளில் இருந்தவர். பிரிவினைவாத இயக்கங்களை களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டவர்.
அதனால், பிரிவினைவாத கொள்கைகளுக்கு எதிராக, கவர்னர் ரவி தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று, கவர்னர் தேசியக் கொடியேற்ற வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை, தமிழக அரசு மேற்கொள்ளும். தேசியக் கொடியேற்ற வரும் கவர்னரை, முதல்வர் வரவேற்பது மரபாக உள்ளது.
எனவே, கவர்னர், தமிழக அரசு இடையே இணக்கமற்ற போக்கு நீடித்தால், குடியரசு தின விழாவும் சர்ச்சையாகும். இதை இரு தரப்பும் விரும்பவில்லை என கூறப்படுகிறது. எனவே, குடியரசு தினத்திற்குள் இணக்கமான சூழலை உருவாக்க, அரசு முயற்சித்து வருவதாகவும், அதை கவர்னர் தரப்பும் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.