காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கிய முதல்வர்.! பெண் காவலர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு.!!
மகப்பேறு முடித்துவரும் பெண் காவலர்களுக்கு கணவர், உறவினர்கள் வசிக்கும் ஊரில் மூன்றாண்டுகள் ஒரே பகுதியில் இருக்கும் வகையில் பணி மாற்றம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு ஆண்டும் பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், தேர்வு செய்யப்பட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், முதலமைச்சர் என்ற வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறேன் என்றும் காவல்துறை நிகழ்ச்சியில் பங்கேற்பது கூடுதல் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார். காவல்துறையினர் பதக்கம் வாங்கியிருப்பது நான் பதக்கம் வாங்கியது போல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பதக்கங்கள் பெற்ற காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர், இந்த பதக்கங்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய உழைப்பிற்கு தலை வணங்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றும் கூறினார். மேலும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்த காவல்துறை மிகச் சிறப்பான முறையில் இருந்தாலும் கூட, தற்போது காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
மூன்றாவது காவல் ஆணையத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் அமைத்தார் என்றும் காவலரின் குறைகளை நிறைவேற்றி வருகிறோம் என்றும் குறிப்பிட்டார். காவல்துறையில் மகளிர் இடம்பெற செய்தது கருணாநிதி தான் என தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், எனக்கு கமெண்ட்ராக ஒரு பெண் அதிகாரி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.
பெண் காவலர்கள் மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும்போது, குழந்தையை பராமரிக்க ஏதுவாக பெண்ணின் பெற்றோர்கள் அல்லது கணவரை சார்ந்த மாவட்டங்களில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணிபுரியலாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.