சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் இந்தி கவிதை சொல்லாத மாணவனை இந்தி ஆசிரியை கடுமையாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பவன் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் 3ம் வகுப்பு மாணவன் ஒருவன் இந்தி படிப்பதில் பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் அந்த பள்ளியின் இந்தி ஆசிரியை அந்த மாணவனை இந்தியில் கவிதை சொல்ல சொன்னபோது அந்த சிறுவன் தடுமாறியதாக தெரிகிறது.
அதனால் அந்த ஆசிரியை சிறுவனை மூர்க்கமாக அடித்ததோடு, சிறுவனை பள்ளிக்குள் நுழைய விட மாட்டேன் என்றும் கூறி மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் இந்த புகாரை அளித்த நிலையில் இந்தி ஆசிரியை பத்மலட்சுமியை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வரும் நிலையில், இது ரகசியமாக இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழக அரசு எதிர்ப்பு காட்டி வரும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K