தமிழகத்தில் வெப்பச்சலன மழை – தமிழ்நாடு வெதர்மேன் தகவல் !
தமிழகத்தில் அதிகப்படியான வெப்பத்தால் வெப்பச்சலன மழைப் பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஃபானி புயல் திசைமாறி நேற்று ஒடிசாவில் கரையைக் கடந்தது. புயல்காற்று நகரும்போது தமிழகத்தில் உள்ள ஈரப்பதத்தையும் சேர்த்து உறிஞ்சி சென்றுவிட்டது. இதனால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தின் சில உள்மாவட்டங்களில் வெப்பச்சலன மழை இன்று பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூலில் ‘ஃபானி புயல் ஈரப்பதத்தை உறிஞ்சி சென்றுவிட்டது. இதனால் தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பச்சலனத்தால் நேற்று சில இடங்களில் மழைப் பெய்துள்ளது. அதேப்போல இன்றும் நாமக்கல், திருவண்ணாமலை, கரூர், தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைப் பெய்யக்கூடும். ஆனால் சென்னையில் வெயில் அதிகமாகவே இருக்கும். இந்தமாதம் முழுவதும் 40 டிகிரி வெயில் இருக்கும். ’ எனக் கூறியுள்ளார்.