சினிமாகாரர்களுக்கு என்ன தெரியும்? விஜய் சேதுபதியை தாக்கும் தமிழிசை!
காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதியை வண்மையாக கண்டித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவிந்தரராஜன்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மற்றும் காஷ்மீரை இரண்டாக பிரித்தது என மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நடிகர் விஜய் சேதுபதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற விருது விழாவில் கலந்துகொண்டு பேசும்போது காஷ்மீருக்கு எதிராக தனது கருத்துகளை பதிவு செய்தார்.
அப்போது அவர், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு எதிரானது. முக்கியமாக பெரியார் அன்றே சொல்லிவிட்டார். அந்தந்த மக்கள் பிரச்னையை அந்தந்த மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
உங்கள் வீட்டு பிரச்சனை உங்களுக்குத்தான் தெரியும். நான் உங்கள் மீது அக்கறை செலுத்தலாம். ஆனால், ஆளுமை செலுத்த முடியாது என தெரிவித்தார். இவரின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளது பின்வருமாறு,
காஷ்மீர் விவகாரத்தில் அதன் பின்புலத்தைத் தெரிந்துகொண்டு நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவிக்க வேண்டும். அவர் போன்ற போன்ற பிரபலங்கள் இந்த விவகாரத்தில் ஆழ்ந்து யோசித்து பேச வேண்டும்.
காஷ்மீர் பற்றி சிலர் தவறாக கருத்து கூறுகிறார்கள். சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன தெரியும்? காஷ்மீரை பற்றி ஒன்றுமே தெரியாத நபர்கள் எல்லாம் கருத்து கூறுகிறார்கள். பெரியார் பற்றி எல்லாம் தேவையில்லாமல் எடுத்துக்காட்டு கூறுகிறார்கள்.
அவர்கள் சினிமாவில் மட்டும் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். காஷ்மீரில் இந்தியா செய்த நடவடிக்கையை பல கோடி பேர் வரவேற்று இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நடிகர்கள் கொஞ்சம் அமைதி காப்பதே நல்லது என்று குறிப்பிட்டுள்ளார்.