ஒன்னுமில்லாமல் போன வழக்கு; நீதிமன்றத்திற்கு சலாம் போட்ட சூர்யா!!
நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் என நடிகர் சூர்யா ட்வீட்.
நீட் தேர்வு விவகாரத்தால் தமிழக மாணவர்கல் மூவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் சூர்யா ‘நீதிமன்றங்களே கொரோனாவுக்கு பயந்து காணொளியில் வழக்குகளை நடத்தி வரும் நிலையில், மாணவர்களை தேர்வெழுத வற்புறுத்துவதாக தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சூர்யா இவ்வாறு பேசியதற்கு அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் எஸ்.எம்.சுப்ரமணியம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேசமயம் சூர்யா உள்நோக்கத்துடன் அவ்வாறு பேசியிருக்க வாய்ப்பில்லை என்று அவருக்கு ஆதரவாகவும் சில ஓய்வு பெற்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சூர்யா கருத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் தேவையில்லை என மனுவை தள்ளுபடி செய்துள்ளது. அதேசமயம் பொதுவான கருத்துகள் பேசும்போது நடிகர் சூர்யா கவனமாக பேச வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.