ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 மே 2019 (07:34 IST)

கமல் கூட்டத்தில் கல், முட்டை வீச்சு: மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு!

அரவக்குறிச்சியில் நேற்று இரவு நடைபெற்ற கமல்ஹாசனின் கூட்டத்தின்போது மர்ம நபர்கள் சிலர் கல் மற்றும் முட்டைகளை மேடையை நோக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
அரவக்குறிச்சியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் பேசியதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று மீண்டும் அரவக்குறிச்சியில் கமல் பிரச்சாரம் செய்தார். நேற்றைய அவரது பேச்சிலும் அனல் பறந்ததால் கூட்டத்தினர் கைதட்டி அவரது பேச்சை ரசித்தனர். ஆனால் கமல் பேசி முடித்துவிட்டு மேடையை விட்டு கிளம்பும்போது திடீரென கல் மற்றும் முட்டைகள் மேடையை நோக்கி பறந்தன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
உடனே அந்த மர்ம நபர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் பிடித்து அடிக்க தொடங்கினர். இருப்பினும் தொண்டர்களிடையே ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அவரது பெயர் ராமச்சந்திரன் என்றும், அவர் தளவாபாளையத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இருப்பினும் மற்றவர்களை போலீசார் வேண்டுமென்றே தப்பிக்க விட்டுவிட்டதாக சினேகன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இந்த பிரச்சனையின்போது திடீரென மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதாகவும் இது திட்டமிட்ட சதி என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூறி வருகின்றனர். 
 
இதனையடுத்து கமல்ஹாசன் இன்று சூலூரில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அவரது பிரச்சாரத்திற்கான அனுமதியை போலீசார் ரத்து செய்துள்ளதாக தெரிகிறது