செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (11:43 IST)

விநாயகர் சதுர்த்தி விழா; சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

bus
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் பல பொது இடங்கள், தெருக்கள் மற்றும் கோவில்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன.

நாளை விநாயகர் சதுர்த்திக்கு மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரயில்களில் முன்பதிவு முழுவதும் முடிந்து பலரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பேருந்துகளிலும் முன்பதிவு அதிகமாகியுள்ளதால், இன்று மாலை முதல் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையம் அதிகளவில் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

தினசரி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்திக்காக மேலும் 750 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், பெங்களூர், கோவை, தென்காசி, ஓசூர் என பல பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதுபோல வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா தொடங்கி இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கும் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.