புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (15:46 IST)

செந்தில் பாலாஜி வழக்கு..! 28-ல் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

senthil balaji ed
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் 28ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையில் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது,  அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி தண்டிக்கப்படும் நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள  வழக்கில் அவர்  விடுவிக்கப்பட்டால் என்ன ஆகும்? எனவும் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
 
2015, 2016,2017ம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் அதிகளவில் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், செந்தில் பாலாஜிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

 
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் 28ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்துள்ளது.