அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு ஒன்பது முறை சம்மன் அனுப்பிய நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில் நேற்று இரவு திடீரென அவர் கைது செய்யப்பட்டார்
இந்த நிலையில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரியும் உச்சநீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்திருந்தது. பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவரது இல்லத்திற்கு சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்த நிலையில் அவரை கைது செய்தனர்.
Edited by Siva