ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (13:15 IST)

பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே டாஸ்மாக் கடைகள் அமைப்பது ஏன்.? அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி..!!

பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே மதுபான கடைகளை அமைப்பது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
 
தூத்துக்குடி மாவட்டம் கடச்சபுரத்தைச் சேர்ந்த ஞானமுத்து  தாக்கல் செய்த மனுவில், ‘சாத்தான்குளம் தாலுகா முதலூர் பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு தலம் மற்றும் அம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு உள்ளாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து, ஊராட்சிமன்ற கூட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்ட நிலையில், ஏற்கெனவே கடை அமைந்த இடத்திற்கு எதிர்ப்புறத்தில் கடை திறந்துள்ளனர்.
 
வழிபாட்டுத் தலங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் டாஸ்மாக் கடைகளை அமைப்பது சட்டவிரோதமானது. எனவே தூத்துக்குடி மாவட்டம் முதலூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
 
இந்த மனு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி முகமது சபிக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகில் உள்ள இடங்கள் மதுபான கடைகளை வைப்பதற்காக தேர்வு செய்யப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினர்.

 
ஆறு மாதங்களுக்குள்ளாக, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை அகற்றப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  மூன்று மாதங்களுக்குள்ளாக டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.