திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 1 ஜூலை 2020 (10:10 IST)

உண்மையை எங்குவேண்டுமானாலும் சொல்ல தயார்: காவலர் ரேவதி பேட்டி

சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரம் நாட்டையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த விசாரணைகள் தற்போது சுறுசுறுப்பாகி உள்ளன. மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் சற்று முன்னர் இந்த இரட்டை மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். இதனை அடுத்து அவர்கள் தங்கள் விசாரணையை இன்று முதல் தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக நேற்று மதுரை ஐகோர்ட்டில் சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதி அவர்கள் கூறிய சாட்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சம்பவ தினத்தன்று காவல் நிலையத்தில் என்ன நடந்தது, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவருக்கும் நடந்த கொடுமை குறித்து காவலர் ரேவதி அவர்கள் விரிவாக சாட்சியில் கூறியிருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தைரியமாக சாட்சி கூறிய ரேவதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. டுவிட்டரில் ரேவதி என்ற ஹேஷ்டேக் தமிழக அளவில் டிரெண்டில் உள்ளது.
 
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த காவலர் ரேவதி அவர்கள் ’தான் நேரில் பார்த்ததை எங்கு வேண்டுமானாலும் தைரியமாக சொல்ல தயார் என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் கிடைக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தலைமை காவலர் ரேவதி அவர்களின் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது