வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (20:52 IST)

மணல் குவாரியை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்-லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு

karur
கரூரில் மணல் குவாரியை துவக்கி தங்களுக்கு மணல் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.
 
கரூர் மாவட்டத்தில் வாங்கல் அடுத்த மல்லம்பாளையத்தில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் கரூரில் செயல்படும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள் மூடப்பட்டன. மண்மங்களத்தை அடுத்த செம்மடையில் லாரிகள் நிறுத்தும் இடத்தில் ஆயிரக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 30 நாட்களுக்கும் மேலாக லாரிகள் நிறுத்தப்பட்டுளளதால் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அண்டை மாவட்டங்களான திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் அரசு மணல் குவாரிகள் செயல்பட துவங்கியுள்ள நிலையில், கரூரிலும் அரசு மணல் குவாரியை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ஏற்கனவே பணம் செலுத்திக் கொண்டு காத்திருக்கும் எங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மணல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்தனர். 
 
கரூர் ஆசாத் சாலையில் உள்ள  பொதுப் பணித்துறை மற்றும் நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். அப்போது, மணல் குவாரியில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணிகள் நடைபெற்று முடிந்து விட்டதாகவும், வரும் 12ம் தேதிக்குப் பிறகு குவாரிகள் முழுமையாக செயல்படும் என்று உதவி செயற் பொறியாளர் வெங்கடேஷன் தெரிவித்தார்.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மணல் லாரி உரிமையாளர் சங்கத்தை சார்ந்த  ஜெயசந்திரன், 
 
வரும் 12ம் தேதிக்குப் பிறகு மணல் லாரிகளுக்கு மணல் வழங்குவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். தவறும்பட்சத்தில் அனைத்து மணல் லாரி உரிமையாளர்களை ஒன்றிணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.