தரிசனத்திற்காக 16 ஆண்டு காத்திருந்த பக்தர்! – திருப்பதி தேவஸ்தானம் இழப்பீடு வழங்க உத்தரவு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர் ஒருவர் 16 ஆண்டுகள் காத்திருந்த வழக்கில் தேவஸ்தானம் இழப்பீடு வழங்கக்கோரி உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தரும் நிலையில், இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ஆகியவை நடைபெறுகின்றன. சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இதுதவிர திருப்பதியில் நடைபெறும் சிறப்பு பூஜைகளை காண ஆயிரக்கணக்கில் முன்பணம் செலுத்தியும் பலர் பதிவு செய்கின்றனர்.
அந்த வகையில் திருப்பதியில் நடைபெறும் மேல்சாத்து வஸ்திர சேவையை காண்பதற்காக ஹரிபாஸ்கர் என்ற நபர் கடந்த 2006ம் ஆண்டில் ரூ.12,500 செலுத்தி பதிவு செய்துள்ளார். பின்னர் 2020ம் ஆண்டில் மேல்சாத்து வஸ்திர சேவையை காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த சமயம் கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் அனைத்து தரிசனமும் நிறுத்தப்பட்டது. சுமார் 16 ஆண்டு காலமாக காத்திருந்தும் தரிசனம் பெற முடியாததால் இதுகுறித்து ஹரிபாஸ்கர் சேலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் திருப்பதி தேவஸ்தானம் ஹரிபாஸ்கருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டுமென கூறி உத்தரவிட்டுள்ளது.