விற்று தீராத திருப்பதி ரூ.300 தரிசன டிக்கெட்டுகள்!
இன்று காலை வெளியிடப்பட்ட ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் குறைந்த அளவு மட்டுமே பக்தர்கள் பதிவு செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
திருப்பதி ஏழுமலை வெங்கடாஜலபதி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். அதிகமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் கூட்ட நெரிசலை குறைக்கவும், கால விரயத்தை குறைக்கவும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் திருப்பதி தேவஸ்தானத்தால் வழங்கப்படுகின்றன.
ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை வாங்க பெரும் டிமாண்ட் உள்ளது. கடந்த மாதத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியான சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
தினமும் 20,000 பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் செப்டம்பர் மாதத்திற்கான 6 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. ஆனால் இப்போது அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதால் ஆன்லைன் தரிசன டிக்கெட் பெறுவதில் அதிக அளவில் பக்தர்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதற்கு முந்தைய மாதங்களில் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 2, 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்துவிடும். ஆனால் இன்று காலை வெளியிடப்பட்ட ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் குறைந்த அளவு மட்டுமே பக்தர்கள் பதிவு செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.