வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2024 (19:45 IST)

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

RSS Parade
கூடுதல் விவரங்களை அளித்தால் ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்புக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
தமிழகம் முழுவதும் வருகிற அக்டோபர் 6-ம் தேதி 58 இடங்களில் அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உயர்நீதிமன்றம் வகுத்த விதிமுறைகளுக்குட்பட்டு தான் அனுமதி கேட்பதாகவும், ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அணி வகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கடந்த ஆண்டு ஊர்வலத்தின் போது பிரச்னை ஏற்பட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதே என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், அது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்தார். 
 
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அனுமதி கோரும் பல இடங்களில் அணி வகுப்புக்கான மாற்று தேதி மற்றும் மாற்று வழித்தடம் குறிப்பிடப்படவில்லை எனவும், எவ்வளவு பேர் கலந்து கொள்கிறார்கள்? தொடங்கும் இடம், முடியும் இடம் குறிப்பிடப்படவில்லை என கூறினார்.
 
உயர்நீதிமன்றம் வகுத்த விதிமுறைகள் படி, கூடுதல் விவரங்களை அளிக்கும் பட்சத்தில் அணிவகுப்பு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்புக்கு அனுமதி வழங்குவதில் அரசின் நோக்கம் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் காவல்துறை கேட்கும் விவரங்களை அளிக்க மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.