திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (13:10 IST)

MBBS சீட் வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி.! முன்னாள் பேராசிரியை கைது.! இருவர் தலைமறைவு.!!

MBBS Cheating
நாகர்கோவில் அருகே பெண் மருத்துவருக்கு மருத்துவ மேற்படிப்பு சீட் வாங்கித் தருவதாக கூறி, 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த முன்னாள் பேராசிரியை கைது செய்யப்பட்டார்.
 
நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த கென்னடி. தொழிலதிபரான இவரது மகள் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு நாகர்கோவிலில் ஒரு மருத்துவமனையில்  டாக்டராக பணியாற்றி வந்தார்.  இவர் மருத்துவ மேற்படிப்பிற்காக முயற்சி செய்தபோது நாகர்கோவில் தம்பத்துகோணம் பகுதியை சேர்ந்த முன்னாள் பேராசிரியை ஜான்சி என்பவர் ஆனந்த் கென்னடியை தொடர்பு கொண்டார்.

மருத்துவ மேற்படிப்புக்கு சீட்டு வாங்கி தருவதாகவும் இதற்கு 23 லட்சம் செலவு ஆகும் என்று கூறியுள்ளார். இதன்படி 23 லட்சம் ரூபாயை ஆனந்த கொன்னடி கொடுத்தார். கல்லூரியில் சேர்வதற்கான உத்தரவுகளை ஜான்சி வழங்கி உள்ளார். ஆனால், அதை கொண்டு சென்ற போது அவை போலியானது என்று தெரிய வந்தது. இது குறித்து ஆனந்த கென்னடி ஜான்சியிடம் கேட்டபோது, இந்த முறை சீட் கிடைக்கவில்லை. அடுத்த முறை கண்டிப்பாக வாங்கி தருவதாக கூறியுள்ளார். 
 
ஆனால், ஆனந்த கென்னடி பணத்தை திரும்ப கேட்ட பொழுது பணத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்தார். இதன் பின்னர் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு 20 லட்ச ரூபாயை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். இது குறித்து ஆனந்த கென்னடி மாவட்ட எஸ்பி சுந்தரவதனத்திடம் அளித்த புகாரின் பேரில் எஸ்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார். 

 
இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி ஜான்சி மற்றும் கடலூரைச் சேர்ந்த டாக்டர் ஜானகிராமன் மற்றும் அவரது தந்தை அண்ணாமலை ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஜான்சியை கைது செய்து தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.