புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2024 (12:07 IST)

நாம் தமிழர் கட்சியில் இருந்து கூண்டோடு விலகல்..! கோவை நிர்வாகிகள் அதிரடி..!

Seeman
நாம் தமிழர் கட்சியில் இருந்து கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகி உள்ளதை அடுத்து, கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். கோவை வடக்கு மாவட்டம் முன்னாள் செயலாளர் ராமச்சந்திரன் இதுகுறித்து கூறியபோது, அருந்ததியர் சமூகத்தினர் குறித்த சீமானின் பேச்சு களத்தில் எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், அதனால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறோம் என்றும் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் அவ்வப்போது விலகி வரும் நிலையில், அவர்கள் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகி உள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முன்னதாக கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்த சுகுமார் ஆகியோர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினர். அதன் பின்னர், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் மற்றும் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி ஆகியோர் விலகினர். மேலும் சேலம் மாவட்ட செயலாளர் அழகாபுரி தங்கம் என்பவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran