துக்க வீட்டில் ஏற்பட்ட மின்சார விபத்து.. 3 பேர் பரிதாப பலி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!
துக்க வீட்டில் ஏற்பட்ட மின்சார விபத்தில் அடுத்தடுத்து மூன்று பேர் பரிதாபமாக பலியான சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதிபுரம் பகுதியில் கடந்த 16ஆம் தேதி துக்க வீட்டில் வைக்கப்பட்ட பிரீசர் பாக்ஸுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றும் போது திடீரென எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அடுத்தடுத்து மூன்று பேர் பலியானதாக தெரிகிறது. சம்பவம் நடந்த இடத்திலேயே பத்மாவதி என்ற 53 வயது பெண் உயிர் இழந்த நிலையில், தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த உறவினரான ஐம்பது வயது பானுமதி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதையடுத்து, நேற்று நள்ளிரவில் இதே விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 50 வயது ராஜேஸ்வரன் என்பவரும் உயிர் இழந்துள்ளார். இதுவரை மூன்று பேர் உயிரிழந்த நிலையில், தற்போது தீக்காயங்களுடன் ஸ்ரீராம் என்ற இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
துக்க வீட்டில் ஏற்பட்ட நிகழ்ச்சியில் நடந்த விபத்தில் அடுத்தடுத்து மூன்று பேர் பலியானது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva