5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்
5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இது குறித்து தமிழக பாஜக தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆல் பாஸ் திட்டம் ரத்து என்பது கல்வியின் தரத்தை மேம்படுத்தவே என்றும், தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் தரம் பின் தங்கியுள்ளதாக ஆய்வறிக்கை சொல்வதால் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஐந்தாம் வகுப்பில் 72% மாணவர்களுக்கு வகுத்தல் கணக்கு தெரியவில்லை என்றும், பத்தாம் வகுப்பு மாணவர்களில் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்குகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்றும், மாணவர்கள் அனைவரையும் வகுப்பறையில் அமர வைத்தேன், பத்தாம் வகுப்பு வரை அனுப்பி வைத்தேன் என்று சொல்வதில் பெருமை இல்லை என்றும் அவர் கூறினார்.
அது 1980களில் தேவைப்பட்டது; ஆனால் 2024 இல் அது தேவை இல்லை என்றும், அனைவரும் அடிப்படையாக படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மத்திய அரசு பணம் குறைவாக கொடுக்கிறது என்று சொல்லி இன்டர்நெட் பில் கட்டவில்லை, வரி அதிகம் கொடுத்தோம் அதை திருப்பி கேட்கிறோம் என்ற கதை எல்லாம் சொல்லாமல், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.
Edited by Siva