விபச்சார வழக்கில் கைது செய்வேன் என மிரட்டினார் - தீக்குளித்த ரேணுகா வாக்குமூலம்
லஞ்சம் பெற்றுக்கொண்டு விபச்சார வழக்கில் தன்னை கைது செய்வேன் என ஆய்வாளர் அலெக்சாண்டர் மிரட்டியதால் தீக்குளித்ததாக திருவேற்காட்டை சேர்ந்த ரேணுகா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவேற்காட்டை அடுத்து கோலடியில் வசிக்கும் கஜேந்திரன் என்பவரின் மனைவி தனது வீட்டின் அருகே ஒரு கழிவறை கட்டி வந்தார். ஆனால், அந்த இடம் தொடர்பாக அவரது அண்டை வீட்டுக்காரர் அமிர்தவள்ளியுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து அமிர்தவள்ளி அளித்த புகாரில் இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது திடீரென ரேணுகா காவல் நிலையத்திலேயே தன் மீது பெட்ரோல் வைத்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அதன்பின் தீக்காயங்களுடன் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரேணுகா தனது தந்தையுடன் செல்போனில் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், ஆய்வாளர் அலெக்சாண்டர் மற்றும் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முன்னாள் சேர்மன் மகேந்திரன் மற்றும் கவுன்சிலர் ஆகியோரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, தன் மீது விபச்சார வழக்கு தொடர்வதாக மிரட்டுகின்றனர் என பேசுவது பதிவாகியுள்ளது.
இதனால், மனமுடைந்த ரேணுகா காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.