வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 1 ஆகஸ்ட் 2018 (17:55 IST)

கரூர் அருகே பள்ளி மாணவன் தற்கொலை- 3 ஆசிரியர்கள் மீது வழக்கு (வீடியோ)

கரூர் மாவட்டம் க.பரமத்தி பெரியார் நகரை சேர்ந்தவர் சுரேஷ், அரசு பஸ் டிரைவர். இவரது மகன் அருள்பிரகாசம் (வயது 12), அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். 
 
நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்ற அருள்பிரகாசம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.
 
இந்த சம்பவம் குறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, மாணவனின் சட்டைப்பையில் இருந்த கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர். அதில், எனது சாவுக்கு காரணம் பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர், செந்தில் ஆசிரியர் என எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
 
 
அப்போது விளையாட்டின் போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பேசுவதற்கு பெற்றோரை அழைத்து வருமாறு அருள்பிரகாசை அறிவுறுத்தினோம். ஆனால் திடீரென அவன் தற்கொலை செய்தது எதிர்பாராமல் நடந்தது என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
இந்தநிலையில் அருள்பிரகாசம் சாவுக்கு காரணமான பள்ளி ஆசிரியர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 
 
இதற்கிடையே அருள்பிரகாசம் படித்து வந்த, க.பரமத்தி அரசு மேல் நிலைப் பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்த நாராயணன், மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு) கனகராஜ், க.பரமத்தி வட்டார கல்வி அதிகாரிகள் முருகன், செந்தில் ஆகியோர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
 
பள்ளியின் தலைமை ஆசிரியர் சதாசிவம், உடற்கல்வி ஆசிரியர் ஜெயபாலன், கணித ஆசிரியர் செந்தில் ஆகியோரிடமும், அருள்பிரகாசத்துடன் படித்த மாணவர்களை அழைத்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
 
விசாரணைக்கு பிறகு ஆசிரியர்கள் ஜெயபாலன், செந்தில் ஆகியோரை வேறு பள்ளிக்கு பணி இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.
 
மேலும் மாணவன் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக, பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவம், ஆசிரியர்கள் ஜெயபாலன், செந்தில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், கரூர் கலெக்டர் மற்றும் கரூர் எஸ்.பிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
- சி.ஆனந்தகுமார்