1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 23 ஜூலை 2018 (18:51 IST)

11 பேர் தற்கொலை : குடும்பத்தில் மிஞ்சிய நாயும் மாரடைப்பில் மரணம்

டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்டதன் தொடர்ச்சியாக, அவர்கள் ஆசையாய் வளர்த்து வந்த நாய் டாமி மாரடைப்பில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடந்த 1ம் தேதி இரவு கூட்டாக தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் 7 பேர் பெண்கள். 10 பேர் தூக்கில் தொங்கியும், முதியவரான நாராயணி தேவி மட்டும் படுக்கையிலும் இறந்து கிடந்தனர்.
 
வீட்டில் கைப்பற்ற டைரியின் மூலம் சொர்க்கத்தை அடைவதற்காக அவர்கள் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தாலும் முழுமையான விபரங்கள் கிடைக்காமல் மர்மம் நீடித்து வருகிறது.

 
அவர்கள் தற்கொலை செய்து கொண்டபின், அந்த வீட்டில் இருந்த 6 வயதுடைய நாய் டாமியை மீட்டு நாய்கள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்திருந்தனர். காப்பகம் சென்றதிலிருந்து 2, 3 நாட்கள் டாமி சாப்பிடாமல் இருந்துள்ளது. காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டிருந்தது. நாட்கள் செல்ல செல்ல டாமி உணவு அருந்தியது. அதன் காப்பாளார் தினமும் அதை நடைபயிற்சிக்கு அழைத்து சென்று வந்தார்.
 
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கிங் சென்ற போது மாலை 6 மணியளவில் டாமி சுருண்டு விழுந்து உயிரை விட்டது. மருத்துவ பரிசோதனையில் மாரடைப்பு ஏற்பட்டு டாமி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தங்கள் எஜமானர்கள் தற்கொலை செய்து கொண்டதால் டாமி மன உளைச்சலில் மரணம் அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த சம்பவம் அந்த 11 பேரின் உறவினர்களுக்கு அதிர்ச்சியையும், நாயின் பாசம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.