வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 மே 2025 (08:27 IST)

அன்புமணி ஆதரவாளர்களை தட்டித்தூக்கும் ராமதாஸ்! அன்புமணி போடும் ஸ்கெட்ச்? - பாமகவில் பரபரப்பு!

Ramadoss Anbumani Clash

பாமக கட்சியில் தலைவர் அன்புமணிக்கும், நிறுவனர் ராமதாஸுக்கும் இடையே எழுந்துள்ள பிரச்சினை பெரிய அளவில் வெடித்துள்ள நிலையில் அடுத்த என்ன என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

 

கடந்த தேர்தல் கூட்டணி குறித்த அன்புமணியின் முடிவுகளால் ஏற்கனவே முரண்பாட்டில் இருந்த ராமதாஸ், சமீபமாக நடந்த கட்சி மாநாடு, மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் நேரடியாகவே அன்புமணி தாக்கி அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அத்தோடு நில்லாமல் நேற்றே பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக முக்கியஸ்தர்கள் அனைவரையும் வரச் சொல்லி முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார் ராமதாஸ். 

 

தற்போது கட்சியில் முக்கிய பதவிகளில் உள்ள அன்புமணி ஆதரவாளர்களை தூக்க ராமதாஸ் திட்டமிட்டு வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. 25 மாவட்ட பொறுப்பாளர்களை மாற்றம் செய்ய பேசியதாக கூறப்படுகிறது. கட்சியில் அன்புமணியின் ஆதிக்கத்தை குறைக்க ராமதாஸ் காய் நகர்த்தி வரும் நிலையில், இன்று அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார்.

 

தனக்கான ஆதரவை அதிகரித்து கட்சி பொதுக்குழு கூட்டத்தை கூட்டி ராமதாஸை ஓரம் கட்டுவது அன்புமணியின் ஸ்கெட்ச்சாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது அன்புமணி ஆதரவாளர்களோடு கட்சி இரண்டாக பிரியவும் வாய்ப்பிருக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. இதற்கிடையே இருவருக்கும் நெருக்கமான சில பாமக பிரமுகர்கள் மீண்டும் தந்தை - மகனை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்களாம்.

 

Edit by Prasanth.K