வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (16:33 IST)

பாஜக செய்தது அருவருக்கத்தக்கது! – கூட்டணி தர்மத்தை தூக்கி எறிந்த ராமதாஸ்!

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள பாஜகவுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் தனது வளர்ப்பு மகளையே மணம் செய்து கொண்டார் என்று தமிழக பாஜக தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுக செயலாளர் வைகோ இதற்காக தமிழக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பதிவை நீக்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. பதிவு நீக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அந்த பயம் இருக்கட்டும் என்ற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜகவின் ட்விட்டர் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ள பாமக தலைவர் ராமதாஸ் ”தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் குறித்து தமிழக பாரதிய ஜனதாக் கட்சியும், அதன் ஐ.டி. பிரிவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து அருவருக்கத்தக்கது. இது அவர்களின் காமாலைக் கண்களைக் காட்டுகிறது. இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது!” என்று கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல கட்சிகள் போராட்டம் நடத்திய போது கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஆதரவு தருவதாக ராமதாஸ் கூறியிருந்தார். தற்போது பெரியார் விவகாரத்தில் அவரே நேரடியாக பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.