செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2018 (12:08 IST)

ரஜினியை விழுங்க காத்திருக்கும் ஒரு மரணக்குழி..

நாடி, நரம்பு எல்லாம் அதிகாரப்பசி ஊறிப்போன ரஜினிக்கு, அரசியல் என்னும் மரணக்குழி காத்திருக்கிறது. நடிகர் சிவாஜியை, சட்டமன்றத்தேர்தலின் போது மக்கள் அவரது சொந்தத் தொகுதியில் தோற்கடித்தது மக்களின் அவமானம் என்றார் திருவாளர் ரஜினி அவர்கள். ஆனால் அதை விட மிகப்பெரிய அவமானத்தை ரஜினி சந்திக்க இருக்கிறார். 

 
அரசியல் தரகர் தமிழருவி மணியன்
 
அரசியல் தரகர் தமிழருவி மணியன் அவர்களே! ரஜினி என்ன காமராஜரா? முதலில் வைகோவுக்கு, பிறகு விஜயகாந்த்துக்கு, பிறகு மோடிக்கு, இப்ப ரஜினிக்கு தரகு வேலையா? ரஜினி அவர்களே! மாற்றம் வேண்டும்தான். அதைக் கொண்டு வர நீங்கள் தகுதியானவர் இல்லை. என்ன வசனம்! ஓர் ஆண்டு காலமாக சிஸ்டம் சரி இல்லை, நம்மை பார்த்து எல்லா மாநிலத்தவரும் சிரிக்கிறார்கள். 
 
சாத்தான் ஓதும் வேதம் 
 
மிகப்பெரும் தலைக்குனிவுதான் தமிழகத்துக்கு! நீங்கள் எல்லாம் சிஸ்டம் பற்றிப்பேசுகிறீர்கள். நீங்கள் சொல்லும் சிஸ்டத்துக்கு முட்டுக் கொடுப்பதே உங்கள் நண்பர் மோடி தான். நீங்கள் எல்லாம் சிஸ்டம் பற்றிப்பேசுவது,  மாற்றங்களை கொண்டு வருவேன் என்பது எல்லாம் சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்.
 
மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து தமிழர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வரும் மத்திய பிஜேபி அரசை நீங்கள் வெளிப்படையாக, துணிச்சலாக விமர்சிக்காத வரை, தன்மானத் தமிழர்கள் யாரும் உங்களை ஏற்கவே மாட்டார்கள்.
 
ஆன்மிக அரசியலா? திராவிட அரசியலா? 
 
என்ன ஆன்மிக அரசியலா? உங்களை வைத்து மாடதிபதிகள் எல்லாம் அரசியல் சாணக்கியர் ஆகத் துடிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. திராவிட அரசியல் என்பது எளிமையானது. வலிமையானது. வர்க்கப்பேதம் இன்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது.         
 
திராவிட அரசியலை பெரியாரும், அண்ணாவும், போதித்து இருக்கிறார்கள். பேசி இருக்கிறார்கள். அந்தத்தத்துவக்களும் போதனைகளுமே எங்களுக்கு போதுமானவை. மடாதிபதிகள் உங்களுக்கு போதித்த ஆன்மிக அரசியல் தத்துவங்கள் எங்களுக்கு தேவை இல்லை.  
 
அன்பின் பசி அல்ல, அதிகார பசி 
 
ரஜினி அவர்களே! உங்கள் இணையத்தள மக்கள் இணைப்பைப்பற்றி கேள்விப்பட்டேன். அருமை! நீங்கள் என்ன புரட்சியாளரா மாற்றத்தை கொண்டு வர? நீங்கள் ஒரு நடிகர் அவ்வளவு தான். ஆன்மிகம் என்ற போர்வையில்  அதிகாரத்தை சுவைக்க விரும்புகிறீர்கள்.   . 
மக்கள் பிரச்சனைகள் போது அதிகாரத்திற்கு பயந்து வாய் மூடி மௌனியாக இருந்தவர்தானே நீங்கள். நீங்கள் தினமும் வழிபடும் பாபாவும் ஸ்ரீ ராகவேந்திராவும் சொன்னது அன்பின் பசி தானே தவிர, அதிகார பசி அல்ல.


 
இரா காஜா பந்தா நவாஸ்