வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 27 செப்டம்பர் 2018 (16:41 IST)

எச். ராஜாவை கைது செய்யமுடியாது: காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் விளக்கம்

காவல்துறையையும் நீதிமன்றத்தையும் தவறாகப் பேசி சர்ச்சையில் சிக்கிய பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவை நீதிமன்ற உத்தரவு வரும் வரை கைது செய்ய முடியாது என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

எச் ராஜா, விநாயக சதுர்த்தியின் போது ஊர்வலம் செல்ல நீதிமன்றம் விதித்த தடைக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு காவல்துறையையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இது தொடர்பாக அவரைக் கைது செய்யக்கோரி பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்தன.


பல்வேறு அரசியல் தலைவர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து ராஜா மீது வழக்குப் பதிவு செய்தது. இருப்பினும் ராஜா இன்னும் கைது செய்யப்படாமல்தான் இருக்கிறார்.

இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் இன்று விளக்கம் அளித்துள்ளார். ராஜா கைது தொடர்பாக அவர் கூறியதாவது ‘நீதிமன்றமே தாமாக முன்வந்து ராஜா மீது வழக்குப் பதிந்துள்ளதால் நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்’ எனக் கூறியுள்ளார்.