1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2017 (18:15 IST)

கரூருக்கு வந்த முதல்வர் ; 3 மணி நேரம் பொதுமக்கள் அவதி - வீடியோ

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் தேவர் குரு பூஜை கொண்டாடப்பட்டது. 


 

 
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பி.எஸ் மட்டுமில்லாமல், தமிழக அமைச்சர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
 
இந்நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டதோடு, மதுரை வழியாக திண்டுக்கல் வந்து கரூர் வழியாக சேலம் சென்றார். இந்நிகழ்ச்சியையொட்டி காலை 10 மணிக்கு அவருக்கு மரியாதை அளித்து, வரவேற்பு அளிக்கப்படும் என்று அ.தி.மு.க வின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தெரிவித்தது. 
 
பழனிச்சாமி 10.30 மணிக்கு என்று தகவல் வெளியானது. ஆனால், மதியம் 12.45 மணிவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவில்லை, அதுவரை காவலர்கள் அங்கே குவிக்கப்பட்டதோடு, பேருந்து பயணிகள், இரு சக்கர வாகன ஒட்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் தேங்கின. 3 மணி நேரம் தாமதமாக வரும் முதல்வருக்காக எங்களை ஏன் காத்துக்கிடக்க வைக்கின்றீர்கள் என்று இருசக்கர வாகன ஒட்டிகள், நடைபாதை பயணிகள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 
மேலும் ஆம்புலன்ஸ்கள் கூட, ஆங்காங்கே காத்திருந்து பின் சென்றதால் நோயாளிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள். இதை கண்டும் காணாமல் இருந்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது முதல்வரின் வருகைக்காக மட்டுமே பார்த்து கொண்டிருந்தார். 
 
மேலும், அமைச்சர் பதவி நிலைப்பதற்காக கரூர் தொகுதி மக்கள் மட்டுமில்லாமல் பிற மாவட்டங்கள் செல்லும் போக்குவரத்துப் பயணிகளையும் காக்க வைத்த சம்பவத்தினால் இப்பகுதியில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது மட்டுமில்லாமல், ஆங்காங்கே டெங்கு உருவாகி வரும் நிலையில் கரூர் நகராட்சி நிர்வாகமானது பை – பாஸ் பகுதியில் கொசுக்களுடன் கூடிய குப்பைகளை முதல்வர் வருவதையொட்டி கிளீன் செய்த காட்சி மிகவும் அருமை என்கின்றனர் பொதுநல ஆர்வலர்கள். 
 
மேலும் ஒருவழியாக கரூர் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தன்னை வரவேற்க கூட்டம் இல்லாததினால் அப்செட் ஆனதோடு, விரக்தியில் சென்றார். இதையடுத்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முகமும் மாறியது. நீண்ட நேரத்திற்கு பின்பு சென்ற இந்த முதல்வரின் பயணத்தையடுத்து ஏற்கனவே 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் கரூர் மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் போடப்பட்டதோடு, முதல்வர் வருகைக்காக, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் போடப்பட்ட போலீஸாரினால் அம்மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, க்ரைம் ஆகிய பிரிவு போலீஸ் பணி முடங்கியது.
 
இனியாவது இதே துறையை சார்ந்த (போலீஸ் துறை) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் ஆகாய மார்க்கமாக விமான பயணம் மேற்கொள்வது எவ்வளவோ மேல் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.
 
சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்