பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள் இன்றே சுதாரித்து கொள்ளுங்கள்
தீபாவளி, பொங்கல் என விசேஷ நாட்களில் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் சொந்த ஊர் செல்ல மூன்று மாதங்களுக்கு முன்னரே ரயிலில் முன்பதிவு செய்வது வழக்கம். மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்தாலும், முன்பதிவு ஆரம்பித்த முதல் நாளே பெரும் போட்டியுடன் விசேஷ நாட்களுக்கான முன்பதிவு முடிந்துவிடும் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் நாளை முதல் தொடங்குகிறது. நாளை காலை சரியாக 8 மணி முதல், ஜனவரி 10ஆம் தேதிக்கான முன்பதிவு தொடங்குகிறது. அதேபோல் ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 13ஆம் தேதியும், ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 14ஆம் தேதியும் தொடங்குகிறது என்பதால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஊருக்கு செல்பவர்கள் இப்போதே சுதாரித்து முன்பதிவை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் கடைசி நேரத்தில் திண்டாடவேண்டிய நிலை ஏற்படும்
மேலும் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரிவோர் ஜனவரி 13ஆம் தேதி அல்லது ஜனவரி 14ஆம் தேதிதான் ஊருக்கு செல்வார்கள். எனவே ஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 15ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதிக்கான முன்பதிவு டிக்கெட் செப்டம்பர் 16ஆம் தேதியும் தொடங்குகிறது என்பதை ஞாபகம் வைத்து கொள்ளலாம்.
அதேபோல் பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்ப முடிவு செய்தவர்கள் ஜனவரி 19ஆம் தேதிக்கு செப்டம்பர் 21 ஆம் தேதியும் ஜனவரி 20ஆம் தேதிக்கு செப்டம்பர் 22ஆம் தேதியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.