புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (10:07 IST)

பொது இடத்தில் போலீஸாரை கேவலமாக பேசிய சி.வி.சண்முகம்! – போலீஸார் வழக்குப்பதிவு!

தேர்தல் பிரச்சாரத்தின்போது போலீஸாரை இகழ்ந்து பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்றுடன் வாக்குசேகரிப்புக்கான அவகாசம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பிரமுகர்கள் பல மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஒருவர் பிரச்சாரத்தை நிறுத்தும்படி சொன்னதால் அவரை சி.வி.சண்முகம் ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் காவல்துறை அரசின் ஏவல்துறையாக மாறிவிட்டதாகவும், மேலும் சில சொற்களாலும் காவல்துறையினரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் சி.வி.சண்முகம் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.