1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (08:41 IST)

ஈபிஎஸ் இல்லாமல் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை கூட்டம் - சசிகலா பற்றிய பேச்சா?

மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே தனியார் ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார் ஓபிஎஸ். 

 
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான பின் அரசியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்த நிலையில், அடிக்கடி அதிமுக தொண்டர்களோடு செல்போனில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தின்போது அதிமுக பொதுச்செயலாளர் என சசிக்கலா பெயரில் கல்வெட்டு அமைக்கப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் எனக் கூறினார். சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என எடப்பாடியார் பேசி வரும் நிலையில் ஓ.பி.எஸ்ஸின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே தனியார் ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார் ஓபிஎஸ். இதில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், உதயகுமார், பாஸ்கரன் மற்றும் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இந்த ஆலோசனை நடந்தது. இதில் சசிகலா விவகாரம் தொடர்பாகவும் பேசப்பட்டதாக தெரிகிறது. ஆலோசனையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள்  கருத்து எதுவும் தெரிவிக்காமல், அங்கிருந்து கிளம்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.