ஓர்வழி நின்று நேர்வழி சென்றால்... ஓபிஎஸ் டிவிட் யாருக்கு??
முதலமைச்சர் யார் என சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஜரூராக தொடங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுக யாரை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கிறது என்பதில் பூசல்கள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.
எம்.எல்.ஏக்க சேர்ந்து முதல்வரை தேர்ந்தெடுப்போம் என செல்லூரார் சொல்ல, ஒரே முதல்வர் எடப்பாடியார்தான் என ராஜேந்திரபாலாஜி சொல்ல அமைச்சர்கள் ஆளுக்கொரு எண்ணத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடியாரை முன்னிறுத்துவது ஓபிஎஸ் அணியினரை அப்செட் ஆக்கியதாகவும் கூறப்பட்டது.
செய்தியாலர்கள் இது குறித்து ஓ.பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அதற்கு இப்போது என்ன அவசரம் என்று அவசரம் இல்லாமல் பதில் அளித்தார். இதனைத்தொடர்ந்து தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து 3 வது முறையாக 2021 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள். தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! என பதிவிட்டுள்ளார்.