திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (15:26 IST)

உயிர்காக்கும் உன்னத பணி செய்யும் செவிலியர்கள் போற்றப்பட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

anbhumani
‘’உயிர்காக்கும் உன்னத பணி செய்யும் செவிலியர்கள் போற்றப்பட வேண்டும்'' என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’உயிர்காக்கும் உன்னத பணி செய்யும் செவிலியர்கள் போற்றப்பட வேண்டும் : உலகின் மிக உன்னதமான பணி உயிர் காக்கும் பணி தான். ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்களும், செவிலியர்களும் தான். இரவும் பகலும் பார்க்காமல் நோயர்களின் நலனைக்காப்பதில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அனைத்து நைட்டிங்கேல்களுக்கும் எனது செவிலியர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’’ என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல்,  தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல் போராடும் செவிலியர்களின் கோரிக்கைகளை ஆளும் திமுக அரசு செவிமடுத்து கேட்டு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மருத்துவமனைகளில் நோயாளிகளை மருந்துகளோடும், மாத்திரைகளோடும்  மட்டுமின்றி அன்பாலும், புன்னகையாலும் அக்கறையோடு கவனித்து குணம்பெற செய்யும் அனைத்து செவிலியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த செவிலியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கொரோனா போன்ற பல்வேறு கொடிய உயிர் கொல்லி நோய் தொற்று காலகட்டம் மட்டுமின்றி அனைத்து தருணங்களிலும்  தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல்  மருத்துவ சுகாதார கட்டமைப்பில் முக்கிய அங்கமாக, அர்ப்பணிப்பு மிக்கவர்களாக  செவிலியர்கள் திகழ்கின்றனர்.

அவ்வாறு மருத்துவர்களுக்கு இணையாக முன்களப்பணியாளர்களாக பல்வேறு சூழ்நிலைகளில் பணியாற்றிடும்  செவிலியர்கள் பணிநிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட வேண்டிய நிலையில் இன்று உள்ளனர்.

ஆகவே நம் உயிர்காக்க தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாமல் போராடும் செவிலியர்களின் கோரிக்கைகளை ஆளும் திமுக அரசு செவிமடுத்து கேட்டு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டு முதல்வர் முக.ஸ்டாலினுக்கு டேக் செய்துள்ளார்.