ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 மே 2023 (08:51 IST)

திமுக சாதனை விளக்க கூட்டம்.. பிடிஆர் பெயர் நீக்கம்!? – என்ன காரணம்?

தமிழ்நாட்டில் திமுகவின் 2 ஆண்டுகால சாதனையை விளக்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ள நிலையில் அதிலிருந்து நிதியமைச்சர் பிடிஆர் பெயர் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு புதிய நலத்திட்டங்கள், உதவி திட்டங்களை திமுக செயல்படுத்தியுள்ளது. இந்த மே மாதத்துடன் திமுக ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்த 2 ஆண்டில் திமுக செய்த சாதனைகளை விளக்கும் வகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

இந்த பொதுக்கூட்டங்களில் மதுரையில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் பேச உள்ளோர் குறித்த முதல் பட்டியலில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் அவர் பெயர் இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நிதியமைச்சர் பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அது போலி வீடியோ என்று சொல்லப்பட்டாலும் அது பிடிஆரின் தனிப்பட்ட பிரச்சினை என சொல்லி திமுக ஒதுங்கி கொண்டது. இந்நிலையில் திமுக சாதனை கூட்டத்தில் பேசுவோர் பட்டியலில் நிதியமைச்சர் பிடிஆர் பெயர் நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K