1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 19 ஏப்ரல் 2018 (16:09 IST)

சம்மதம் எனில் குட்மார்னிங் மேசேஜ் அனுப்புங்கள் - நிர்மலா தேவியின் வாட்ஸ் அப் உரையாடல்கள்

பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி பெண்களை குறிவைத்து விடாமல் தொல்லை கொடுத்ததை நிரூபிக்கும் வாட்ஸ்-அப் உரையாடல்கள் நேற்று இரவு வெளியானது.

 
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று அவர்கள் தங்கள் விசாரணைய தொடங்க உள்ளனர்.
 
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த 4 மாணவிகளிடம் நிர்மலா தேவி செய்த வாட்ஸ்-அப் உரையாடல்களை ஒரு தனியார் தொலைக்காட்சி நேற்று வெளியிட்டது.
 
செல்போனில் பேசியது மட்டுமில்லாமல் நிர்மலா தேவி வாட்ஸ்-அப் உரையடல்கள் மூலம் அந்த மாணவிகளை விடாமல் துரத்தியுள்ளார். “கண்ணுங்களா. வெளியே செல்வோமோ? டீம் அமைப்போமா? அமைதியாக சாதிப்போமா?” என வலை வீசுகிறார்.  “வெற்றிக்கு திறமை மட்டும் போதாது. உடல் மற்றும் மன ரீதியாகவும், புத்திசாலியாகவும் செயல்பட வேண்டும்” என செய்தி அனுப்புகிறார். 

 
ஆனால், மாணவிகள்  மறுக்க, விடாமல் துரத்துகிறார். நானும் தொடக்கத்தில் இப்படித்தான் இருந்தேன். நீங்கள் நல்ல வாய்ப்பை இழக்கிறீர்கள். அதிர்ஷ்டம் ஒரு முறைதான் கதவை தட்டும் என ஆசை வார்த்தை பேசுகிறார்.
 
அப்போதும் மாணவிகள் பிடி கொடுக்காமல் இருப்பதோடு, நிர்மலா தேவியை கண்டித்து மேசேஜ் அனுப்புகிறார்கள். ஆனாலும், நிர்மலா தேவி அசரவில்லை. இது நல்ல வாய்ப்பு, விட்டு விடாதீர்கள் என மீண்டும் தொடங்குகிறார்.
 
அதோடு, உங்களுக்கு ரிஜிஸ்டர், கலெக்டர் ஆகிய பணிகளில் சேர விருப்பமில்லையா? எனக் கேட்கிறார். உங்களுக்கு விருப்பம் எனில் எனக்கு குட்மார்னிங், குட் நைட் மெசேஜ்களை அனுப்புங்கள். உங்கள் வாட்ஸ்-அப்பில் உங்களின் அழகிய புகைப்படங்களை வையுங்கள். நான் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுகிறேன்.நீங்கள் வேண்டாம் என சொல்வதால் இது நடக்காமல் இருக்கப் போவதில்லை. அவர்கள் வேறு நபர்களை தேடி செல்வார்கள் எனக் கூறுகிறார். மேலும், எனக்கும், இரு மகள் இருக்கிறார்கள். எனவே, இதில் பாதுகாப்பு பற்றி நான் மிகவும் யோசிப்பேன் என அக்கறை காட்டுகிறார்.
 
அப்போது மாணவிகள் எச்சரிக்க, வேறு வழியின்றி என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன். என்னை நம்புங்கள். இந்த விசயத்தை வெளியே கூறிவிடாதீர்கள்’ என அவரின் வாட்ஸ்-அப் உரையாடல்கள் தொடர்கிறது.
 
ஆடியோ வெளியாகி பரபரப்பான நிலையில், நிர்மலா தேவியின் வாட்ஸ்-அப் உரையாடல்கள் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.