1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2020 (15:46 IST)

விவசாயம் என்னவாகும்? மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்? சீமான் ஐடியா!!

கொரோனா இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்திரவினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது விவசாயிகள்தான் என சீமான் வேதனை. 
 
ஊரடங்கு தளர்வில் விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, விவசாயத்தைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என சீமான் கோரிக்கை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு... 
 
கொரோனா நோய்த்தொற்று அதிகரித்தால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பும் உள்ளதால் விவசாய உற்பத்தி முடங்கியிருப்பது என்பது கடுமையான உணவுப் பஞ்சத்திற்கும், பட்டினி சாவிற்க்கும் வழிவகுத்துவிடும்.
 
• இதனைத் தவிர்க்க மத்திய மாநில அரசுகள், விவசாயப் பணிகள் செய்வதற்கும் , விளைபொருட்களை எடுத்துச் செல்வதற்கும் உள்ள நிபந்தனைகளை மேலும் தளர்த்த வேண்டும். விவசாயிகள் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு எடுத்து சென்று விற்பனை செய்யவும் அனுமதிக்க வேண்டும்.
 
• போதுமான அளவு விவசாய எந்திரங்கள், விவசாயக் கூலியாட்கள், உரங்கள் உள்ளிட்ட விவசாயம் தடைபடாமல் நடைபெற தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு எடுக்க வேண்டும்.
 
• நெல், மலர் கொள்முதல் நிலையங்கள், காய்கறி, பழங்களுக்கான சேமிப்பு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும் அவை இருக்குமிடத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கான வாகன வசதியையும் அரசே ஏற்படுத்தித் தரவேண்டும்.
 
• பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் இடைத்தரகர்களுக்கு இடமளிக்காமல் இரண்டு ஆண்டிற்கு விளைபொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய முன்வரவேண்டும்.
 
• தற்போதைய சூழ்நிலையில் உற்பத்தி செலவையே மீளப்பெற முடியாத நிலை உள்ளதால் சிறு, குறு விவசாயிகள் வாங்கியுள்ள விவசாயக் கடன்களை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்ய அரசு முன்வர வேண்டும்.
 
• விவசாயிகளுக்கு விதிக்கப்படும் விற்பனை வரியை ஓராண்டிற்குத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
 
• உயர்நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு இணங்க ஊரடங்கால் பாதிக்கப்பட்டு நட்டமடைந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவியும், விவசாயப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான கடனுதவியும் அளிக்க வேண்டும்.
 
• மாவட்ட வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறையின் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விளைபொருட்களைப் பாதுகாக்கவும்,
 
• அவற்றை விற்பனைசெய்யவும், பாதிப்பிலிருந்து மீண்டு விவசாயத்தை மீண்டும் தொடங்கிட தேவையான ஆலோசனைகளையும், வாய்ப்புகளையும் விவசாயிகளுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.
 
எனவே மத்திய மாநில அரசுகள், இந்தக் கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு உடனடியாக விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.