திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2020 (13:11 IST)

கொரோனா நோயாளி மனைவியின் செல்போன் சிக்னல்! – கிராமமே தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம்!

கொரோனா பாதிக்கப்பட்டவர் மனைவியின் செல்போன் சிக்னல் கண்டறியப்பட்ட கிராமம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களது குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற ஒருவர் சென்னையில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அவர்களை அறிவுறுத்தியிருந்த நிலையில், அவர் மனைவி சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாளேதோட்டம் என்னும் கிராமத்திற்கு சென்றதாக தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து போச்சம்பள்ளி போலீஸார் பாளேதோட்டத்தில் விசாரித்ததில் அவர் அங்கு இல்லை என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டபோது அவர் தான் இதுவரை கிருஷ்ணகிரிக்கு சென்றதே இல்லை என கூறியுள்ளார். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் அவரது மொபைல் எண் சிக்னல் பாளேதோட்டத்து பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், பாளே தோட்டம் கிராமமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.