வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 அக்டோபர் 2019 (13:11 IST)

சுஜித் இரங்கற்பாவில் வேறு குழந்தையின் படம்! - முரசொலி பத்திரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான குழந்தை சுஜித்துக்கு எழுதப்பட்ட கவிதையில் வேறு ஒரு குழந்தையின் புகைப்படத்தை முரசொலி இதழ் அச்சிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி நடுக்காட்டுப்பட்டி அருகே குழந்தை சுஜித் 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 4 நாட்கள் தொடர் மீட்பு பணி முயற்சிகள் பலனளிக்காத சூழலில் குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான்.

தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த சோக சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும், திரைத்துறையினரும் குழந்தை சுஜித்துக்கு இரங்கல்களை தெரிவித்தனர். இந்நிலையில் முரசொலி இதழில் சுஜித்துக்கு இரங்கற்பா ”போய்ச் சேர்ந்த செல்லமே” என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. கவிஞர் சாவல்பூண்டி சுந்தரேசன் என்பவர் எழுதியுள்ள இந்த கவிதையில் குழந்தை சுஜித் படத்திற்கு பதிலாக வேறு ஒரு குழந்தை படம் அச்சாகியுள்ளது.

சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட போது பல்வேறு குழந்தைகளின் வீடியோக்களை ஷேர் செய்து அது சுஜித் என்று பதிவிட்டு வந்தனர். அந்த குழந்தைகள் சுஜித் கிடையாது என்று விளக்கமளித்து பல்வேறு ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் சுஜித்தின் இரங்கற்பாவில் உயிரோடு இருக்கும் வேறொரு குழந்தையின் புகைப்படத்தை முரசொலி இதழ் அச்சிட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.