கீழடியை பார்த்தபோது சந்திரயானை போல் பறந்தேன்.. மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
கீழடியில் நின்றிருந்தபோது எனது மனம் சந்திரயான் விண்கலம் போல பறந்தது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் பண்டைய பொருட்களான மண் பானை, முதுமக்கள் தாழி ஆகிய பொருட்கள் கண்டறியப்பட்டன. இது சங்ககால நாகரீகத்துக்கான சான்றாக கருதப்படுகிறது. சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு, ஹராப்பா மொகஞ்சாதாரோவின் தொடர்ச்சியாக கீழடி நாகரீகம் இருந்துள்ளது என்பதையும் உறுதிபடுத்தியது இந்த அகழாய்வு.
இந்நிலையில் கீழடி பகுதியை சென்று பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், தான் கீழடியில் நின்றபோது மனம் சந்திரயான் போல உயரே பறந்தது என கூறியுள்ளார். மேலும் திராவிட தமிழர்கள், பண்டைய நாகரீகத்தில் சிறந்து விளங்கியுள்ளனர் எனவும், இது போன்ற பண்பாட்டு பெருமைகளை பாதுகாப்பது நமது கடமை எனவும் தெரிவித்துள்ளார்.