மாறிப்போன வினாத்தாள்? தேர்வுகள் ரத்து! – நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு!
சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் மாறிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பல்கலைகழகத்தில் இன்று செமஸ்டர் தேர்வுகள் தொடங்கிய நிலையில் காலை தமிழ் பாடத்திற்கான வினா தாள்கள் வழங்கப்பட்டன. ஆனால் அதில் இருந்த கேள்விகள் தாங்கள் படித்த பாடத்தில் கிடையாது என மாணவர்கள் சொன்னதால் குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் 3வது செமஸ்டர் தமிழ் வினாத்தாளுக்கு பதிலாக 4வது செமஸ்டர் வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதனால் இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசியுள்ள உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, மாணவர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட 4வது செமஸ்டர் தேர்வின் தமிழ் வினாத்தாள் கடந்த ஆண்டு வினாத்தாள்தான் என்றும், எனினும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Edited By Prasanth.K