ஃப்ரிட்ஜ் வெடித்து பத்திரிக்கையாளரின் குடும்பமே பலி – சென்னையில் சோக சம்பவம்
சென்னையில் வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் வெடித்ததால் பத்திரிக்கையாளர் உட்பட அவரது குடும்பத்தினரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள தாம்பரம் பகுதியில் வசித்து வருபவர் பிரசன்னா. தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிகிறார். நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய பிரசன்னா சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றிருக்கிறார். படுக்கையறயில் பிரச்சனாவும், அவரது மனைவியும் உறங்கியிருக்கின்றனர். ஹாலில் அவரது தாய் படுத்திருந்திருக்கிறார்.
இந்நிலையில் அதிகாலை நேரத்தில் பிரசன்னாவின் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தீ பரவி புகைமூட்டமாகியுள்ளது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அதை உணரவில்லை. அந்த சமயம் மின்கசிவால் வீட்டிலுள்ள ஃப்ரிட்ஜ் வெடித்து நாலா பக்கமும் தீ பரவியிருக்கிறது.
வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருந்ததால் தீ பரவியது வெளியே யாருக்கும் தெரியவில்லை. காலையில் வீட்டுக்கு வந்த பணிப்பெண் வீட்டிலிருந்து புகையாக வருவதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார். அவர்கள் போலீஸுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் சொல்லிவிட்டு வீட்டை உடைத்து உள்ளே போயிருக்கிறார்கள். ஆனால் தீயில் கருகி அந்த குடும்பமே சடலமாகி கிடந்திருக்கிறது.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒரு குடும்பமே தீயில் கருகி இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.