விதிமுறைகளை மீறி ‘வெற்றிநடை போடும் தமிழகமே’ – தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்!
மதுரையில் தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக விளம்பரம் ஒளிபரப்பியதாக திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் மதுரை குரு திரையரங்கில் தேர்தல் கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி இடைவேளை நேரத்தில் அதிமுகவின் வெற்றிநடை போடும் தமிழகமே விளம்பரத்தை ஒளிபரப்பியதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கோட்டூர்சாமியிடம் புகார் அளித்துள்ள திமுகவினர், தேர்தல் கட்டுப்பாடுகளை மீறி விளம்பரம் செய்த குரு திரையரங்கு மீதும், செய்தி மற்றும் விளம்பர துறை இயக்குனர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் மூலமாக செய்தித்துறை இயக்குனருக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும், அனைத்து திரையரங்கிலும் இந்த விளம்பரம் ஒளிபரப்புவதை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.