ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 டிசம்பர் 2019 (15:47 IST)

கொல்லைப்புற வழியாக தாரைவாய்க்கும் அதிமுக... ஸ்டாலின் ஆதங்கம்!

அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசிடம் தாரைவார்ப்பதற்காகவே ஒரு குழுவினை அமைத்திருப்பது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென்றால் தமிழகத்தின் இட ஒதுக்கீடு முறையில் பாதிப்பு ஏற்படாது என மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
 
இதன் அடிப்படையில் மத்திய அரசு உறுதியளிக்கும் பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுமா? என 5 அமைச்சர்கள் அடங்கிய ஆய்வு செய்யவுள்ளது. இந்த குழுவில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மின் அமைச்சர் தங்கமணி, சட்ட அமைச்சர் சிவி சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் அதிமுகவின் இந்த செயலை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்ட முக்கியமானவை பின்வருமாறு... 
 
திமுக ஆட்சிக்காலத்தில் மாணவர்கள் வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்தபோது கடுமையாக எதிர்த்த அ.தி.மு.க., இப்போது அதே அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசிடம் தாரைவார்ப்பதற்காகவே ஒரு குழுவினை அமைத்திருப்பது, மாநில அரசிடம் உள்ள பல்கலைக்கழகத்தைக் கொல்லைப்புற வழியாகவே மத்திய அரசிடம் ஒப்படைக்கவும், காலப்போக்கில் அண்ணா பெயரை அகற்றவும், அமைக்கப்பட்ட குழுவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தைக் கூறுபோட நினைக்கும் அ.தி.மு.க. அரசுக்கு எனத கடும் கண்டனத்தைத் வெளிப்படுத்தியுள்ளார்.