கள்ள சாராயத்தை நோக்கி படையெடுக்கும் மது விரும்பிகள்! – அதிரடி நடவடிக்கையில் போலீஸ்!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள்ள சாராயம் புழக்கம் அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகள் மற்றும் டாஸ்மாக்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் மது விரும்பிகள் பெரும் இக்கட்டான சூழலுக்கு உள்ளாகியுள்ளனர். பல இடங்களில் இரவு நேரத்தில் டாஸ்மாக் பூட்டை உடைத்து மதுப்பாட்டில்களை திருடி செல்லும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.
இந்நிலையில் சில பகுதிகளில் மதுவுக்கு மாற்றாக பலர் சாராயத்தை நாடுவதாக தெரிய வந்துள்ளது. விருதுநகர் அருகே ராஜபாளையம் பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பொருட்களை தயார் செய்த தம்பதியினரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற கள்ள சாராயம் காய்ச்சுதல் வேறு எங்கேயாவது நடைபெறுகிறதா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
அதனால் டாஸ்மாக் மதுபானங்களை மக்கள் கூடாமல் பெறுவதற்கு ஏதாவது வழிவகை செய்தால் கள்ள சாராய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.