நாம் தமிழர் கட்சியில் இருந்து பெண் பிரபலம் விலகல்.. சீமான் மீது குற்றச்சாட்டு..!
நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏற்கனவே சில நிர்வாகிகள் விலகிய நிலையில், தற்போது பெண் பிரபலம் ஒருவர் விலகி உள்ளார். பெண்களுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கியத்துவம் இல்லை என சீமான் மீது அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் விலகியிருந்தார். அதன் பின்னர் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்த சுகுமாரும் விலகினார். இருவரும் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் கட்சியில் இருந்து விலகி, சீமான் தனிப்பட்ட கருத்துக்கள் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறினார். அதேபோல், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டனும் விலகினார்.
தற்போது நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளவஞ்சி விலகியுள்ளார். கட்சியின் தலைமை செயல்பாடுகள் தனக்கு பிடிக்கவில்லை என்றும், குறிப்பாக பெண்களுக்கு அந்த கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து சீமானிடம் புகார் அளித்த போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக டாக்டர் இளவஞ்சி தெரிவித்துள்ளார்.
Edited by Siva