வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2024 (11:27 IST)

மீண்டும் 3 நாட்கள் தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு..!

Holiday
கடந்த வாரம் சுதந்திர தின விடுமுறை காரணமாக தொடர் விடுமுறை இருந்த நிலையில் இந்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி காரணமாக மீண்டும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதை அடுத்து சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியாகி உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொடர் விடுமுறை, முகூர்த்தம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கம் - அவர்களின் தகவல் ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை சுப முகூர்த்தம்,  24ஆம் தேதி சனிக்கிழமை, 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி ஆகிய விடுமுறை தினங்களை ஒட்டி சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதன் படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 24 ஆம் தேதி சனிக்கிழமை ஆகிய நாட்களில் 485 பேருந்துகளும், இதன் தொடர்ந்து 25ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி  திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி அன்று கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி மற்றும் 24 ஆம் தேதி  அன்று 70 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து வெள்ள மற்றும் சனிக்கிழமைகளில் 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 10,008 பயணிகள் சனிக்கிழமை அன்று 3,085 பயணிகள் ஞாயிறு அன்று 5,161 பயணிகளும் மற்றும் திங்கள் அன்று 5,166 பயணிகள் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இவ்வாறு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva