கலைஞர் ஆரம்பித்த பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரா?
சென்னைக் கோயம்பேடு பேருந்து நிலையம் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எம்ஜிஆரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஓராண்டாக தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வந்தது. அதன் நிறைவு விழா சென்னையில் கடந்த மாதம் 30-ந்தேதி நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என தெரிவித்தார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திட்டம் 1996-2001 ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டது. கட்டடப் பணிகள் நிறைவுற்றப்போது ஆட்சி மாறியிருந்ததால் ஜெயலலிதா முதலவராக பதவியில் இருந்தார். அதனால் கடந்த 2002 ஆம் ஆண்டு கோப்யம்பேடு பேருந்து நிலையத்தை அவர் திறந்து வைத்தார். திமுக, அதிமுக இரண்டு கட்சியினரும் அவ்வப்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆரம்பித்து வைத்தது நாங்கள்தான் என்று வார்த்தைப் போர்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த பெயர் மாற்றம் அறிவித்தவுடனேயே திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு க ஸ்டாலின் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். கலைஞர் ஆரம்பித்த பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயரை சூட்டுவது அடுத்தவர் குழந்தைக்கு தனது பெயரை சூட்டுவது போல் உள்ளது என தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
ஆனால் தற்போது முதலவர் அறிவித்தப்படியே கோயம்பேடு பேருந்து நிலையம் புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் எனப் பெயர் மாற்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தின் முகப்பு மற்றும் எல்லா நடைமேடைகளிலும் இந்த பெயரில் தற்போது ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுள்ளன. விரைவில் எலக்ட்ரானிக் பெயர் பலகைகள் மாற்றப்படும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.